• Sat. Apr 20th, 2024

பாராளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் முடிவு?

Byமதி

Nov 22, 2021

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களுடன் மத்திய அரசு பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும், தீர்வு ஏற்படாததால் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், உடனடியாக தங்கள் போராட்டத்தை முடித்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை. 3 வேளாண் சட்டங்களை வருகிற பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முறைப்படி வாபஸ் பெறும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.

மேலும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விவசாய சங்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த அமைப்பின் தலைவர் தர்‌ஷன்பால் கூறும்போது, பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை முடித்துகொள்ள போவது இல்லை. ஏனெனில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இன்றுவரை அது செயல்படுத்தப்படவில்லை. இதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இந்த சட்டங்களை வாபஸ் பெற்ற பின்னரே எங்கள் போராட்டத்தை நிறைவு செய்வோம் என்றார்.

இந்த நிலையில் விவசாய சங்கங்கள் நேற்று மீண்டும் ஆலோசனை நடந்தது.

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை பாராளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடரின்போது தினசரி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் சமீபத்தில் அறிவித்து இருந்தன.

இன்றைய கூட்டத்தில் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *