மக்களை முட்டாளாக்கும் செயலை பாஜக செய்து வருகிறது. அப்படி செய்தால் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் நிலை கூடிய விரைவில் இந்தியாவிலும் நடக்கும் என்று எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இலங்கை நிலவரம் தினசரி கலவரமாக மாறி வருகிறது. அங்கு மக்கள் அரசுக்கும் ஆட்சியாளருக்கும் எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இலங்கை போன்ற சூழல் விரைவில் ஏற்படும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் எச்சரித்து வருகின்றனர்.
அதே சமயம் இந்தியாவில் மோசமடைந்து வரும் பொருளாதார பாதிப்பை மக்களிடமிருந்து மறைக்கும் வகையில் மதம் சார்ந்த பிரச்சினைகளை கிளம்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது .சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே ஹிஜாப், அசைவ உணவு தடை போன்ற மதம் சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி பாஜக மக்களை முட்டாளாக்கி வருகின்றது. இதே நிலை நீடித்தால் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடுவது போல் இந்தியாவிலும் நடக்கும் என்று அவர் தெரிவித்தார்.