• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தேர்தல் ஆணையம்

Byவிஷா

Mar 13, 2024

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கூகுள் நிறுவனத்துடன் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில், பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க கூகுள் நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது உள்பட தேர்தல் சார்ந்த பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், தேர்தல் ஆணையத்துடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கூகுள் வலைதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை தற்போது அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே டீப் ஃபேக் மற்றும் பொய்யான செய்திகள் மூலம் மக்களை திசை திருப்புவதை தடுத்து வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. வன்முறையை ஏற்படுத்துவது, வெறுப்புணர்வை பரப்புதல் போன்றவற்றை தடுக்க உள்ளூர் நிபுணர்கள் குழு மூலமாகவும் இயந்திரக் கற்றல் மூலமாகவும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே கூகுளில் விளம்பரங்களை பதிவிடும் வகையில் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை கண்டறியும் கூட்டமைப்புடனும் கூகுள் ஒப்பந்தமிட்டுள்ளது.