• Tue. Apr 30th, 2024

கரடியிடம் இருந்து தனது எஜமானரை காப்பாற்றிய நாய்…

கோவையில் கரடியிடம் போராடி தனது எஜமானரின் உயிரை வளர்ப்புநாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குஞ்சப்பனை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவர் தனது வீட்டில் நாட்டு நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். இதற்கு பப்பி என பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் ராமராஜன் தனது தோட்டத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தபோது, அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து வந்த கரடியொன்று அவரை தாக்க துவங்கியது. தடுமாறி கீழே விழுந்த ராமராஜனை மூர்க்கத்தனமாக நகத்தால் கீறியபடி கழுத்துப் பகுதியை கடித்து குதற முயன்றுள்ளது. கரடியிடம் வசமாக சிக்கிக்கொண்ட ராமராஜன் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடியிருக்கிறார்.

சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடிவந்த அவரது நாய், கரடிக்கு மிக அருகில் சென்று விடாமல் குரைக்க துவங்கியதோடு ஒரு கட்டத்தில் கரடியை கோபத்துடன் கடித்து திருப்பி தாக்கவும் துவங்கியது. நாயின் இச்செயலால் அச்சமடைந்த கரடி வேறு வழியின்றி ராமராஜனை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது. இதற்குள் நாயின் தொடர் சத்தத்தை கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ள தோட்டத்தினர் விரைந்து வந்து காயமடைத்த ராமராஜனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். கரடி கடித்ததில் காயமடைந்த ராமராஜனுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

விவசாயியை கரடி பட்டப்பகலில் தாக்கியுள்ள சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *