• Thu. Apr 25th, 2024

மயிலாடுதுறையில் அதிகாரிகள் மீது அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்..!

Byவிஷா

Feb 21, 2023

மயிலாடுதுறையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி காட்டியது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்நிலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில், மயிலாடுதுறை நகராட்சி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அளிக்கப்பட்ட மனுவிற்கு நடவடிக்கை எடுக்காமல் முறையாக பதில் வழங்குவதில்லை, கூட்டத்திற்கு சரிவர வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.


இந்நிலையில் இதனை அறிந்த புதிய பொறுப்பேற்ற ஆட்சியர், இன்றும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வராமல் இருந்த மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோரிடம் செல்பொனில் தொடர்பு கொண்டு ஏன் கூட்டத்திற்கு வரவில்லை எனவும், மனுக்களுக்கான உரிய நடவடிக்களும், பதிலும் அளிக்காது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும், மக்கள் குறைதீர் கூட்டத்தில் வரும் மனுக்களுக்கு அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று முறையாக பதில் அளிக்க வேண்டும் என்றும், சம்பளம் வழங்குவதில் 38 வது இடத்தில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம் தற்போது முதலாவது இடத்தில் உள்ளதாகவும், இதே போல் அனைத்து துறைகளிலும் அனைவரும் முறையாக தங்களின் வேலைகளை செய்து பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்த மனுவிற்கு உடனடி தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடுமையாக கடிந்து கொண்டார். அடுத்து வரும் கூட்டங்களில் உயரதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக மகாபாரதி பொறுப்பேற்ற நாள் முதல் மாவட்டம் முழுவதும் பம்பரம் போல் சுழன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு உதாரணமாக இந்த செயல் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர்..,
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியரே பலமுறை கலந்து கொள்ளாமல், மாவட்ட வருவாய் அலுவலர் கூட்டங்களை பெயரளவில் நடத்தி வந்த நிலையில், தற்போது ஆட்சியர் முறையாக கலந்து கொண்டு உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் என பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *