• Sat. Apr 27th, 2024

பள்ளியில் கிளைகளுக்கு பதில் மரங்களை வேரோடு சாய்த்த கொடூரம்

தேனி அரசுப் பள்ளி வளாகத்தில் நின்ற பிரமாண்ட மரங்களின் சாய்ந்திருந்த கிளைகளுக்குப் பதில் மரங்களையே வெட்டி வீழ்த்தப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைமையான புங்கை மரங்கள் பள்ளியை பசுமையான சோலையாக மாற்றி இருந்தன.

இதில் சமீபத்தில் பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழையால் ஓரிரு மரங்களில் கிளைகள் சாய்ந்து தாழ்வாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கிளைகளை அகற்றுவதற்கு பதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் நின்ற பிரமாண்டமான நான்கு புங்கை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

இந்த நிலையில் இந்தப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அப்போது மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு விறகு கட்டைகளாகக் குவிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மரங்களை வெட்டியதை கண்டித்து பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தனர்.

பள்ளிகளில் மரங்கள் நட்டு பராமரிக்கவும், மரங்களை பாதுகாக்கவும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளரை நியமித்து அரசு பல்வேறு பசுமை செயல்பாடுகளை செய்து வருகிறது. இந்தச் சூழலில் பசுமையாக நின்ற மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்ட சம்பவம் வேதனை அடைய செய்துள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள தேனி வட்டார கல்வி அலுவலர் ஹெலன், “அந்தப் பள்ளியில் உள்ள மரங்களில் சில கிளைகளைப் பாதுகாப்பு கருதி அகற்ற உள்ளதாகக் கூறினர். ஆனால், மரங்கள் வேரோடு வெட்டப்பட்ட விவரம் தெரியாது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்” என்று விளக்கமளித்துள்ளார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *