• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Byவிஷா

Apr 29, 2024

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்தவர். இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர் கல்வித் துறைப் புள்ளிகளுக்குப் பாலியல்ரீதியாக அவர்களைப் பயன்படுத்த முயன்றிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இவரால் குறிவைக்கப்பட்ட மாணவிகள், நிர்மலாதேவி பேசியதை பதிவு செய்து பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார்செய்ய, அதை அலட்சியம் செய்தது நிர்வாகம். அந்த நேரம், அவர் மாணவிகளிடம் பேசிய போன் உரையாடல், சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடக்கத்தில் மறைக்கப்படவிருந்த இந்தச் சம்பவம், அருப்புக்கோட்டை தன்னார்வ அமைப்பு, எஸ்.எஃப்.ஐ., ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் போராட்டம், நீதிமன்ற வழக்குக்குப் பிறகு போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளிக் கிளம்பி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே ஆளுநர் மாளிகையும் இந்த வழக்கில் இணைத்துப் பேசப்பட்டதால், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக்குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.
2018 ஏப்ரலில் நிர்மலாதேவி கைதுசெய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுப்பட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் இன்னும் பலர்மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள் என இறுதிசெய்து குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
நீண்ட நாள்கள் சிறையில் இருந்த நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தாங்கள் அப்பாவிகள், பலிகடாவாக்கப்பட்டிருக்கிறோம்’ என்று முருகனும் கருப்பசாமியும் ஊடகங்களில் தெரிவித்துவந்தார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் விசாரணை தாமாதமானது.
இவர்களுக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 1,360 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அனைத்துச் சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் கடந்த 26 ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது.
இந்த நிலையில் முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிலையில் முதல் குற்றவாளி என கருதப்பட்ட நிர்மலா தேவி உடல் நலக்குறைவு காரணமாக ஆஜர் ஆகாததால் இன்றைய தினம் தீர்ப்பை ஒத்திவைத்து மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய மூவரும் இன்று காலை சுமார் 10:30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளி கருப்பசாமி, மூன்றாவது குற்றவாளி முருகன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பேராசிரியை நிர்மலாதேவியை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை விவரமானது இன்று மதியத்திற்கு மேல் அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.