• Tue. Feb 18th, 2025

மழை நிவாரண தொகையை அறிவித்தார் முதல்வர்

Byகாயத்ரி

Nov 12, 2021

புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதில், விளைநிலங்களில் மழை நீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொடர் மழை காரணமாக ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் என்.ரங்கசாமி, நிவாரண உதவி அறிவித்தார். அதாவது, மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், உயிரிழந்த ஆடுகளுக்கு ரூ.5 ஆயிரம், மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். விரைவில் சாலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறும்.அதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை நானும் பார்வையிட்டு உள்ளேன். தொடர்ந்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, அனைத்து தரப்பினருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.