• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாளை மறுநாள் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

Byவிஷா

Jan 30, 2024

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம், நாளை மறுநாள் (பிப்.1ஆம் தேதி) டெல்லியில் நடக்கிறது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 27 கூட்டங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் 28-வது கூட்டம், நாளை மறுநாள் (பிப். 1-ம் தேதி) டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டம் 3 மாதங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்துக்கான அழைப்பு அவர்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளது. கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு 3 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை.
காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. இதையடுத்து, கடந்த 18-ம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு மொத்தம் 5.26 டி.எம்.சி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 1-ம் தேதி கூடவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்குமா என்பது தெரியவரும்.