• Sun. Apr 28th, 2024

சிமி தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

Byவிஷா

Jan 30, 2024

இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பான சிமி-க்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன்(யுஏபிஏ)கீழ், பிரிவு 3(1)ன்படி, சட்டவிரோத செயல்கள், கூட்டு வைத்தல் ஆகியவற்றுக்காக இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பான சிமி-க்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சிமி அமைப்பை சட்டவிரோத செயல்கள் செய்யும் அமைப்பாகக் கருதி மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடை 2003, செப்டம்பர் 26வரை நீட்டிக்கப்பட்டது. பின் 2008, பிப்ரவரி 7ம் தேதி வரையிலும், பின்னர் 2010, பிப்ரவரி 5ம் தேதிவரையிலும் நீட்டிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து 2012, பிப்ரவரி 3ம் தேதிவரையிலும், 2014, பிப்ரவரி1ம் தேதிவரையிலும், கடைசியாக 2019,ஜனவரி 31ம் தேதிவரையிலும் சிமி அமைப்பு செயல்படத் தடைவிதிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “சிமி அமைப்பு தொடர்ந்து தீவிரவாதச் செயல்களிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும், நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், அந்த அமைப்புக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவே சிமி செயல்பட்டது. சிமி அமைப்பு மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் ஏராளமான கிரிமினல் வழக்குகளும், சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகளும் நிலுவகையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில், “தீவிரவாதத்துக்கு எதிராக துளியும் பொறுத்துக்கொள்ளாத கொள்கையை பிரதமர் மோடி கடைபிடித்து வருகிறார். அவரின் கொள்கையின் அடிப்படையில்தான் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிமி அமைப்பு தொடர்ந்து தீவிரவாதச் செயல்களிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும், நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், அந்த அமைப்புக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
சிமி அமைப்பைத் தடை செய்ய வேண்டும், தடையை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி, சமீபத்தில் ஆந்திரப்பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உ.பி. மாநில அரசுகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *