• Sun. Apr 28th, 2024

டிஎன்பிஎஸ்ஸி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

Byவிஷா

Jan 30, 2024

தமிழகத்தில் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்ஸி குரூப் 4 தேர்வு, ஜூலை 9 ஆம் தேதியன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளால் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் குரூப் 4 ஜூன் 9ம் தேதி காலை 9.30 முதல், பகல் 12.30 வரை தேர்வு நடைபெற உள்ளது. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வுக்கு www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1705, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445, பில் கலெக்டர் 66 உட்பட 6,244 இடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4 முதல் மார்ச் 6 ம் தேதிக்குள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ளலாம் இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளை பொறுத்தவரை தமிழில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்களும், பொதுவான கேள்விகளாக 75 கேள்விகளும், ஆப்டிடியூட் 25 கேள்விகளும் இடம்பெறும். மொத்தமாக 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். 3 மணி நேரம் நடைபெறும் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *