கொரோனா இரண்டாவது அலையினால் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தது. இதனால் மிகவும் மோசாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளது.
ஆனால் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோ இன்னமும் கொரோனா வைரசை ஒரு சாதாரண காய்ச்சல் போல பாவித்து, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்வதை விமர்சனம் செய்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளம் வாயிலாக பேசியபோது, கொரோனா தடுப்பூசிகள் எய்ட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் என கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவலை பகிர்ந்து தடுப்பூசி குறித்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியதாக அதிபர் ஜெயீர் போல்சனரோவுக்கு எதிராக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில் போல்சனரோவுக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தொடங்கியது. அப்போது, கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்ப சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியதற்காக போல்சனரோ மேலும் ஒரு வழக்கை பதிவு செய்ய அரசு வக்கீல்களை அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.