• Thu. Apr 25th, 2024

கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

காவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் அருகே உள்ளது வீராணம்.இந்த பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் (வயது 46) நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார்.கோஷ்டி மோதல் தொடர்பாக இரண்டு தரப்பினர் மோதலில் ஈடுபட்டபோது ரவுடி ஆனந்த் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இந்த கொலை தொடர்பாக ஏழு பேரை காரிப்பட்டி தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ரவுடி ஆனந்த்கொலை குறித்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.ரவுடி ஆனந்தின் சடலத்தை காரிப்பட்டி போலீசார் கைப்பற்றி உடல் கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு அனுப்பி வைத்தனர்.இதனை அறிந்த ரவுடி ஆனந்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சேலம் மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூட்டம் முன்பாக இன்று காலை திரண்டனர்.அப்போது ஆனந்தின் நண்பர்கள் சிலர் காவல் துறை அதிகாரிகளிடம் ரவுடி ஆனந்தின் சடலத்தை சேலம் பொன்னம்மாப்பேட்டை மற்றும் வீராணம் வழியே காட்டூருக்கு எடுத்துச் செல்ல அனுமதி தர வேண்டும்.இல்லையெனில் கடை அடைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் செய்வோம் என தெரிவித்தனர்.
பொன்னம்மாபேட்டை வழியே சடலத்தை எடுத்து சென்றால் இரண்டு தரப்பினருடைய தகராறு ஏற்படும் என தெரிவித்து பொன்னம்மாப்பேட்டை வழியே சடலம் எடுத்து செல்ல அனுமதி மறுத்தனர் .இதனால் கோபமடைந்த ஆனந்தின் நண்பர்கள் சடலத்தை வாங்க மறுத்து காவல்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பிரேத பரிசோதனை கூடம் முன்பு குவிக்கப்பட்டனர் .
சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா உடனே பிரேத பரிசோதனை கூடம் முன்பு வந்து ஆனந்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து சமாதானப்படுத்தினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது ஆனந்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறும் தாங்கள் சடலத்தை எடுத்து சென்று இடுகாட்டில் இறுதி சடங்குகளை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.இதன் பிறகு உறவினர்களிடம் ரவுடி ஆனந்தின் சடலம் வழங்கப்பட்டது .அவர்கள் ஆம்புலன்ஸ் வேனில் சடலத்தை எடுத்து வீராணத்துக்கு எடுத்துச் சென்றனர்.இதன் பிறகு பிரேத பரிசோதனை கூடம் முன்பு திரண்டு இருந்த ஆனந்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மேற்கொண்டு ஏதும் பிரச்சினை செய்யாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த பிரச்சினையால் சேலம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *