• Fri. Apr 26th, 2024

தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்

‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.இதில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க வசுந்தரா கதாநாயகியாக நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக ‘பரியேறும் பெருமாள்’ கதிர் நடித்துள்ளார். மேலும் ‘ஆடுகளம்’ முருகதாஸ், வையாபுரி, ஷாலின், கலைச்செல்வன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘லென்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தென் தமிழகத்தின் உட்பகுதிகளில் சில கிராமங்களில் இப்போதும் பின்பற்றப்பட்டு வரும் ‘தலைக்கூத்தல்’ என்ற பழமையான கொலை முறையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது.
வீட்டில் வயதான பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டு வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை அன்றாடம் கவனிப்பதற்காகவே அவர்களுடைய குடும்பத்தினர் பெரும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்.இதைத் தவிர்க்கும் பொருட்டு அந்தப் பெரியவர்களுக்கு ‘தலைக்கூத்தல்’ என்கிற முறையில் எண்ணெய் தேய்த்து, குளிக்க வைத்து, இளநீரை குடிக்க வைத்து அவர்களுக்கு இயற்கையான முறையில் உடனடியாக மரணத்தை ஏற்படுத்தும் ஒருவிதமான கருணைக் கொலையை பல கிராமங்களில் சத்தமிலவ்லாமல் செய்து வந்தார்கள். வருகிறார்கள். இந்தப் படம் இதை மையப்படுத்திதான் உருவாகி உள்ளது.சமுத்திரக்கனியின் அப்பாவான மேஸ்திரி முத்து, தான் கட்டி வந்த சொந்த வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து சுய நினைவிழந்து படுத்த படுக்கையாகிவிடுகிறார்.
அவரை அவரது மகனான சமுத்திரக்கனி கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறார். அப்பாவை பார்த்துக் கொள்வதற்காகவே தான் பார்த்து வந்த மேஸ்திரி வேலையைவிட்டுவிட்டு, இரவு நேரத்தில் மட்டும் வேலை பார்க்கும்விதமாக வாட்ச்மேன் வேலைக்குப் போகிறார்
தந்தையின் மருத்துவச் செலவுக்காகக் கடன் மேல் கடன் வாங்கி வைத்திருப்பதால் சமுத்திர கனிக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டு அவர்களது தாம்பத்திய வாழ்க்கையிலேயே விரிசல் விழுகிறது.
சமுத்திரகனியின் மாமனார், மைத்துனர், ஊர்ப் பெரியவர்கள் அனைவருமே உயிருக்குப் போராடும் அவர் தந்தை முத்துவை ‘தலைக்கூத்தல்’ முறையில் கருணைக் கொலை செய்யும்படி சமுத்திரகனியிடம் சொல்கிறார்கள். ஆனால் அவரோ இதை ஏற்க மறுக்கிறார்.
இந்தப் பிரச்சினை வீட்டில் பூதாகாரமாக வெடிக்க, அவரது மனைவியும், மகளும் அவரைவிட்டுப் பிரியும் சூழல் ஏற்படுகிறது. இப்போது சமுத்திரகனிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ‘தலைக்கூத்தலை’ செய்வதா..? வேண்டாமா..? என்பதுதான்.சமுத்திரகனி அந்தக் ‘தலைக் கூத்தல்’ முறையிலிருந்து அவரது அப்பாவைக் காப்பாற்றினாரா..? அல்லது செய்தாராஎன்பதுதான் இந்தத் ‘தலைக்கூத்தல்’ படத்தின் திரைக்கதை.பழனியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி தன் நடிப்புலகின் சிறந்த படமாக இதைச் சொல்லலாம். அந்த அளவுக்கு தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் வழங்கியிருக்கிறார்.

தன் பாத்திரத்தின் கனமறிந்து தனது பண்பட்ட நடிப்பால் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார் கனி. இடைவேளைக்கு பின்பு நமக்கு நன்கு தெரிந்த சமுத்திரக்கனியே திரையில் தெரியாமல் ‘பழனி’ என்ற கதாப்பாத்திரமே நமக்குத் தெரிகிறார். இதுவே அவருக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான்.
அதேபோல் நம்பிக்கைதான் வாழ்க்கை. அனைவரும் ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் அது நடக்கும் என்று சொல்லும் சமுத்திரகனியின் நம்பிக்கை ஜெயித்தாற்போல் அவரது அப்பா கண் விழித்தவுடன், அப்பாவை அழைத்துக் கொண்டு ஊரைச் சுற்றிக் காட்டுவதும், கோவிலுக்கு அழைத்துச் செல்வதும், மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதுமாய்… இப்படியொரு மகன் யாருக்குக் கிடைப்பான் என்று நம்மை நெகிழ வைத்திருக்கிறார் சமுத்திரகனி.
மனைவியாக நடித்திருக்கும் வசுந்தரா, உண்மையான கிராமத்துப் பெண் கதாப்பாத்திரத்தை அப்படியே தனக்குள் ஏற்றிக் கொண்டு நடித்திருக்கிறார். கணவன் மீதான கோபத்தைத் தன் கண் பார்வையிலேயே கடத்தும்போது நம்மைக் கவர்கிறார்.
தீப்பெட்டி கம்பெனியில் வேலைக்கு போகும் வசுந்தரா தான் அங்கு சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை தாங்க முடியாத கோபம். இன்னொரு பக்கம் கடன் தொல்லை.. அப்பாவிடமிருந்து வரும் அழுத்தம் என்று எல்லாமாக சேர்ந்துதான் அவரைத் ‘தலைக்கூத்தலு’க்கு ஆதரவாக்கிவிடுகிறது. இதனை தன்னுடைய இயல்பான நடிப்பால் நமக்கு உணர்த்தியிருக்கிறார் வசுந்தரா.‘ஆடுகளம்’ முருகதாஸின் கதாப்பாத்திரம் எதற்கு என்றுதான் தெரியவில்லை புத்தர் செய்ததுபோல இவரும் உலகம் சுற்றக் கிளம்பியது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால், இவரது மனைவியின் பரிதாபமான கேரக்டர் உச்சுக் கொட்ட வைக்கிறது. வையாபுரியின் சாமியாடி கதாப்பாத்திரம் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.
கோமாவில் ஆழந்திருக்கும் ஒரு நோயாளியாக படத்தில் வசனமே பேசாமல் படுத்தேயிருந்து நம்மைக் கதி கலங்க வைத்திருக்கிறார் ‘முத்து’ என்ற அப்பா கதாப்பாத்திரத்தில் நடித்த கலைச்செல்வன். பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருக்கும் கதிரின் முகச்சாயலுக்கேற்ற பொருத்தமான சாய்ஸ்தான் இவர்.
இளம் வயது முத்துவாக அடிக்கடி வந்து போகும் கதிரின் காதல் கதை கவிதையாய் வடிக்கப்பட்டுள்ளது
கதிரின் காதலியாக நடித்திருக்கும் வங்காள நடிகை படம் நெடுகிலும் ஜாக்கெட் அணியாத துணி துவைக்கும் சமூகப் பெண்ணாக நடித்திருக்கிறார். இதனால்தான் கொல்கத்தாபோய் அழைத்து வந்திருக்கிறார்கள் போலும்..! கவர்ச்சி முகமாய் தெரிகிறார்
தன்னை உணர்ந்த, நிஜவுலகம் புரிந்த, பக்குவம் அறிந்த பெண்ணாக நடித்திருக்கிறார் காதலியாக நடித்த நடிகை. ஊருக்குத் துணி துவைக்க வந்த குடும்பத்தில் இருக்கும் தான், தனக்கு வேலை கொடுக்கும் பெரிய குடும்பத்துப் பையன் மீது காதல் கொள்வது கூடாது என்பதை அந்த இளம் வயதிலேயே மெச்சூர்டு தன்மையுடன் கதிரிடம் எடுத்துச் சொல்வது சிறப்பு.
மகளது நல் வாழ்க்கைக்காக ஆவேசப்படும் சமுத்திரக்கனியின் மாமனார், அக்காவுக்காக மாமாவின் கடனை அடைக்கும் மைத்துனர், பணத்தையே குறியாக வைத்து வாழும் கந்துவட்டிக்காரர், ஊரில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று படத்தில் இருக்கும் இதரக் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் கிராமத்து மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.சமுத்திரகனியின் மகள் வசுந்தராவின் அப்பாவிடம் “நீயும் இது மாதிரி படுத்தேன்னா, நான் கண்டிப்பா இது மாதிரி பார்த்துக்குவேன் தாத்தா…” என்று களங்கமில்லாமல் சொல்லும் காட்சியில் கை தட்டலில் தியேட்டரே அதிர்கிறது.

“பக்கத்துல வராதே; உன் மேல பீ நாத்தம் அடிக்குது!”

“உசிரு போகுறப்போ போகட்டும்… நாமளா அதை எடுக்கக் கூடாது. அது கொலை!”

“இந்த உலகத்தில் எந்த உயிரும் யாராலும் எடுக்கப்படக் கூடாது. ஒவ்வொரு உயிரும் பூமிக்கு வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு.”

“தாத்தா எப்படிச் செத்தாருன்னு எனக்குத் தெரியும்ப்பா!..” என்று கனியின் மகள் பேசும் கடைசி வசனம்.. இப்படி படம் நெடுகிலும் வந்திருக்கும் யதார்த்தமான வசனங்களே நம்மை படத்தைப் பெரிதும் ரசிக்க வைத்திருக்கின்றன.

“எந்த உயிரையும் கொல்லக் கூடாது” என்று கதிர் தன் மகனுக்குச் சொல்லும் காட்சிகளை இடைமறித்து இப்போது சமுத்திரகனி தன் மகனுக்குச் சொல்வதாய் காட்டும்போதும் திரைக்கதை பாராட்டைப் பெறுகிறது.

ஒரு வரட்டு பட்டிக்காட்டு கிராமத்தை பார்த்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது மார்டின் டான் ராஜின் சிறப்பான ஒளிப்பதிவு. தொழில் நுட்பத்தில் கண்ணன் நாராயணின் பின்னணி இசை படத்துக்கு ஜீவனாய் அமைந்திருக்கிறது. ‘யார் அறிந்ததோ’ என்ற பாடல் நம் மனதைத் தொட்டிருக்கிறது.
‘மேஜிக்கல்-சர்ரியலிஸ-ரியலிஸ’ கதை சொல்லல் என்ற திரை நுட்பத்தின் வடிவாய் கதிரின் பிளாஷ்பேக் காதல் காட்சிகள் இருந்தாலும், இந்தப் படத்திற்கு இது தேவைதானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. உண்மையில் இந்தப் படத்தில் இரண்டு முக்கியக் கதைகள் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளன.ஒன்று ‘தலைக்கூத்தல்’ கதை. இன்னொன்று பெரியவரின் காதல் கதை. சாகின்ற நிலைமையில் இருப்பவருக்கு அவரது முற்றுப் பெறாத காதல் இப்போதும் பெருந்துயரமாய் இருப்பதையும், அதன் பொருட்டே அவருக்கு சாவு உடனேயே வராமல் இருப்பது போலவும் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
அந்தக் காதல் கை கூடாமல் போயிருந்தாலும், இந்த மகன் பிறந்த பிறகு அந்தக் காதலி என்னவானாள் என்பது பற்றிச் சொல்லப்படாததால் ஒரு சின்னக் குழப்பமும் ஏற்படுகிறது.
தற்போது நடக்கும் சமுத்திரகனி வீட்டுக் கதை, இதனூடே பெரியவரின் நினைவுகளில் வரும் காதல் கதை.. மீண்டும் கனியின் கதை என்று மாறி மாறி வரும் காட்சிகளாலும், மெதுவாக கதை சொல்லும் திரைக்கதையினாலும் சில இடங்களில் நமக்கு சோர்வாகிறது.

ஆனாலும், முடியாமல் இருக்கும் பெரியவர்களைக் கொலை செய்யும் கொடூரமான நடைமுறைக்கு எதிராகவும், நம் ஒவ்வொருவரின் நினைவடுக்குகளிலும் காதல் போன்ற நினைவுகளுக்கு அழிவில்லை என்பதைக் காட்சிப்படுத்திய விதத்திலும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பார்ப்போரின் மனதுக்கு நெருக்கமாகக் காட்டியிருக்கும் ஒரு சுவையான இந்த சினிமா அனுபவத்துக்காகவும் இந்தத் `தலைக்கூத்தலில்’ நாமும் அனுபவித்துவிட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *