30 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கன் போரில் ஏற்பட்ட கொடூரத்தை, தன்னுடைய ஒற்றைப் பார்வையில் தெரியப்படுத்திய பச்சைக் கண்களைக் கொண்ட ‘ஆப்கன் பெண்’ இப்போது மீண்டும் வைரலாகியிருக்கிறார்.
1980 களில் ஆப்கானிஸ்தானில் உக்கிரமான போர் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள், அடைக்கலம் தேடி பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். அப்படி இடம் பெயர்ந்தவர்களில் ஒருவர் ஷர்பத் குல்லா. பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்த அவர், அங்கிருந்த அடைக்கல முகாமில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு வயது 12. பச்சை நிறக் கண்களை உடைய அவரின் முகத்தில் சொந்த நாட்டை விட்டு வெளியேறி, அகதியாக வாழும் வலி, கோபம் ஒரு சேர கண்ணில் தீயாக தெரிந்தது.
அதனை கச்சிதமாக படம் பிடித்த புகைப்படக் கலைஞர் மெக்கரி, ‘ஆப்கன் பெண்’ என அந்தப் புகைப்படத்தை வெளியிட்டார். இந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது. நேஷ்னல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டைப் படத்திலும் அவருடைய புகைப்படம் இடம்பிடித்தது. ஆப்கன் போரின் வலியை உலகுக்கு பறைசாற்றும் விதமாக அமைந்த ஷர்பத் குல்லாவின் புகைப்படம். பின்னர், பாகிஸ்தானிலேயே தங்கிய அவரை, மெக்கரி 2002 ஆம் ஆண்டு மீண்டும் தேடிக் கண்டுபிடித்தார்.
பாகிஸ்தான் நாட்டின் குக்கிராமத்தில் வாழ்ந்த ஷர்பத் குல்லா, போலி அடையாள அட்டைகளுடன் அங்கு தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டார். 3 குழந்தைகளுடன் இருந்த அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்து நாடு கடத்தியது. இதனை அறிந்த அப்போதைய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, ஷர்பத் குல்லாவை, ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துக் கொண்டார். அவருக்கு அரசு சார்பில் தங்குவதற்கு வீடும் கொடுத்தார். இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் போர் உக்கிரமடைந்ததையடுத்து, ஷர்பத் குல்லா மீண்டும் வேறொரு நாட்டில் அடைக்கலம் தேடிச் செல்ல அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் முறையிட்டார்.
அஷ்ரப் கனி தலைமையிலான அரசு அனுமதியளித்ததையடுத்து, இத்தாலிக்கு இடம்பெயர்ந்துள்ளார். அவருக்கு அரசு சார்பில் தங்குவதற்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. இளம் வயதில் வலி, வேதனையை கண்கள் மூலம் தெரியப்படுத்திய அவர், இப்போதும் அதே வலியுடன் நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறார். 12 வயதில் எடுக்கப்பட்ட இளம் வயது புகைப்படத்தையும், இப்போது 3 குழந்தைகளுக்கு தாயான பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வைத்து, ஆப்கானிஸ்தான் நிலையை விமர்சித்து வருகின்றனர். இதனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அவரின் புகைப்படமும், இப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் ஒரு சேர இணையத்திலும் வைரலாகியுள்ளது.