மதுரை வடக்கு (ம) கிழக்கு சார்பில் (டிச.22) தவெகவின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும்.
மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கும் பணியில் கட்சி செயலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (டிச. 01) ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தவெகவில் இணைய வந்திருந்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டத் தலைவர் விஜய் அன்பன் கல்லானை முன்னிலையில் வழக்கறிஞர் தியாகராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவெகவில் இணைந்தனர். அலங்காநல்லூர், பாலமேடு, குருவித்துறை, சோழவந்தான், மன்னாடிமங்கலம், வாடிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் தவெக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதுகுறித்து பேசிய அவர்கள், தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக்குவதற்காக நடிகர் விஜயின் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டதாகத் தெரிவித்தனர்.
வாடிப்பட்டியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக ,அதிமுக , பாஜக, நாம் தமிழர் காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இளைஞர்கள் உறிப்பினர்களாக சேர்ந்து வருவதாக அக்கட்சியின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விழாவின் முக்கிய அம்சமாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தை தனது நெஞ்சில் பச்சை குத்திய 85 வயதுடைய முதியவர் தவெகவில் இணைந்துள்ளது பேசுபொருளானது.
இதுமட்டுமின்றி மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். போல் வேடமணிந்த நபர் ஒருவர் விழாவின் மேடையேறி, விஜய்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக வர வேண்டும் என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். மேலும், இன்றைய இளைய சமுதாயம் மற்றும் பெண்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் எனவும் கூறினார். இதன் மூலம் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மதுரை அருகே உள்ள நரசிங்கம் சமுதாயக் கூடத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு (மா) கிழக்கு தொகுதியின் நிர்வாகிகள் சார்பில் ‘கலந்தாய்வு கூட்டம்’ நேற்று (டிச.08) நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் வருகின்ற (டிச.22) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைவர் விஜய் அன்பன் கல்லானை தலைமையில், யா.ஒத்தக்கடையில் தவெக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்கள், மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறினார்கள்.