• Tue. Apr 30th, 2024

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல்

ByN.Ravi

Apr 16, 2024

அதிமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில்  தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் அடித்து பிரச்சாரம் செய்தார்.

 மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில், பொதும்பு கிராமத்தில் திண்ணைப் பிரச்சாரம் ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தார். இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி 50 ஆண்டுகாலம் இயக்கத்திலிருந்து சேவை செய்தவர். அவரை எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் ஏற்கனவே மூன்று முறை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து, குக்கர் சின்னத்தில் நின்று தோற்றுப் போனார். அதன் பின்பு உதயசூரியன் சின்னத்தில் நின்று தோற்றுப் போனார், தற்போதும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார் தோற்றுப் போவார். அதிமுகவில் தங்க தமிழ் செல்வனாக இருந்தார். திமுகவில் சென்றவுடன் தகர தமிழ்ச்செல்வனாக மாறிவிட்டார். அதேபோல், டிடிவி தினகரன் பிஜேபி கூட்டணி வைத்தால், தற்கொலைக்கு சமம் என்று கூறினார். தற்போது, தன் மீது உள்ள பெரா வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டணி வைத்துள்ளார்.
கட்சித்தீவு திமுக ,காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் தாரைவார்க்கப்பட்டது, கட்சதீவை மீட்க அம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனை தொடர்ந்து, ஆளும் கட்சியாக வந்த பின்பு வருவாய்த் துறையும் வாதியாக அதை சேர்த்தார் .
பிஜேபி கட்சதீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட செய்யவில்லை, ஆனால், தற்போது வாக்கு வங்கியை மையப்படுத்துவதற்காக கச்சத்தீவு மீட்போம் என்று பேசுகிறார்கள் என்று மக்களுக்கு சந்தேகம் எழந்துள்ளது.
அதேபோல், தற்போது தேர்தல் வாக்குறுதிகளை பிஜேபி கூறியுள்ளது. ஏற்கனவே, வெளிநாட்டில் உள்ள கள்ளப்பணத்தை மீட்டு ஒவ்வொரு  குடும்பத்திற்கும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வோம் என்று கூறினார்கள். அதை செய்யவில்லை.
தேர்தல் வாக்குறுதி என்பது மக்களை கவரும் வகையில், உள்ளது.ஆனால் மக்களை வாழ வைக்க வில்லை. எடப்பாடியார் அனைத்து பெண்களுக்கும் 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். அம்பானி, அதானி ,டாட்டா பிர்லா போன்றவர்களுக்கு கடனை ரத்து செய்துள்ளார்கள்.
அந்தக் கடனை மீட்டு, பெண்களுக்கு மாதம் 3000 கொடுக்கலாம். அண்ணாமலை ஒரு ரெடிமேட் அரசியல் தலைவர். அவருக்கு ஆளும் பண்பு, தலைமை பண்பு இல்லை,
காலி பெருங்காய் டப்பாவாகதான் உள்ளார். தோல்வி பயத்தில் தெருசண்டை போல பேசி வருகிறார். அவரிடம் அதிகாரம் கொடுத்தால், குரங்கு கையில் பூமாலை போல ஆகிவிடும். அவரிடத்தில் உண்மை இல்லை போலித் தன்மை தான் உள்ளத்தில் உள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கொள்ளையடித்த பணத்தை 500, 1000 ரூபாயை கொடுக்க உள்ளனர். ஏற்கனவே, அமைச்சர் பி.டி. ஆர். தியாகராஜன், ஸ்டாலின் மருமகனும் 30,000 கோடியை கொள்ளையடித்ததாக கூறியுள்ளார். அந்த பணத்தை வைத்து ஒரு வீட்டுக்கு  பத்தாயிரம் ரூபாய் கொடுக்கலாம். ஆனால், ஐநூறு ரூபாய் ,ஆயிரம் ரூபாயை ஓட்டுக்கு ,நோட்டு கொடுக்க திமுக உள்ளனர் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *