• Wed. Feb 19th, 2025

காலையில் விவசாய வேலை, மாலையில் பிரச்சாரம்

ByG.Suresh

Apr 16, 2024

ஒவ்வொரு வீட்டிற்கும் சந்தனமரம், செம்மரம் கொடுத்து கோடீஸ்வரர்களாக ஆக்குவதே தனது லட்சியம் என்று கூறி, வித்தியாசமான முறையில் காலையில் விவசாய வேலை, மாலையில் பிரச்சாரம் என்று சிங்கிளாக சுயேச்சை வேட்பாளர் கலைச்செல்வம் வாக்கு சேகரித்து வருகிறார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் கலைச்செல்வம் காலையில் விவசாயப் பணியையும், மாலையில் பிரச்சாரமும் செய்து வருகிறார். ஆறு தொகுதிகளும் 6 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சந்தனமரம் செம்மரம் கொடுத்து கோடீஸ்வரர்களாக ஆக்குவதே தனது லட்சியம் என்று கூறி வித்தியாசமான முறையில் சிங்கிளாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நாராயணத் தேவன்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் (39). இவர் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு கிரிக்கெட் மட்டை சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயி ஆன இவர், அவரது நிலத்தில் நெல் அறுவடை செய்தல், களத்தில் நெல்மணிகளை தூற்றுதல் ஆடு மாடுகளை பராமரித்தல் போன்ற பணியில் ஈடுபடுகிறார். தொடர்ந்து தினமும் மாலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். சிங்கிளாக இருசக்கர வாகனத்தில் சென்று வீடு வீடாக தனது வாக்குறுதிகளை சொல்லி வாக்கு சேகரிக்கிறார்.

இது குறித்து கலைச்செல்வம் அளித்த பேட்டியில்..,

காலையில் விவசாய பணிகளை செய்வேன். அது தான் எனக்கு வாழ்வாதாரம். மக்கள் பணியில் ஈடுபட தேர்தலில் நிற்பதால் மாலையில் பிரச்சாரம் செய்கிறேன். இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவத்தை எடுத்துரைப்பேன். பொதுமக்களுக்கு வீட்டுக்கு ஒரு சந்தன மரம், செம்மரம் வளர்க்க வலியுறுத்தி உறுப்பின நிதியிலிருந்து பராமரிப்பேன். 20 ஆண்டுக்குள் அவர்களை கோடீஸ்வரராக ஆக்குவேன். ஒவ்வொரு கிராமத்திலும் போக்குவரத்து, குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை அமைப்பேன் என மக்களிடம் எடுத்துரைத்து வருகிறார். முழுக்க, முழுக்க விவசாயிகளை நம்பியே தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதாகவும், எனக்கு ஆதரவு இருக்கிறது. வெற்றி பிரகாசமாக இருப்பதாக கூறுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட ஆள் சேர்க்க பணம் கொடுத்து கூட்டி வர வசதி இல்லை என்றும், தேர்தலில் போட்டியிட ரூ50,000 கடன் வாங்கி களத்தில் இறங்கி இருப்பதாகவும், விவசாய பணிகள் செய்து கடனை அடைத்து விடுவேன் என்றும், எளிமையாக நடந்து சென்று வாக்குறுதிகளை கூறி மக்களை சந்திப்பதால், வாக்காளர்களிடம் கலந்துரையாடி அவர்களின் நம்பிக்கையை பெறுவதால் தனக்கு வெற்றி நிச்சயம் என கூறுகிறார். நாளையுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சி வேட்பாளருக்கு இணையாக இவர் போன்ற சுயோட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்ப்பதை காண முடிகிறது.