• Sat. Apr 26th, 2025

இந்தியாவில் விற்பனைக்கு வரும் டெஸ்லா

Byவிஷா

Feb 19, 2025

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருவதன் காரணமாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியா முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பதவிகள் மும்பை அல்லது டெல்லியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். அதன்படி விற்பனை ஆலோசகர், சேவை மேலாளர், நுகர்வோர் மேலாளர் உள்ளிட்ட வேலைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனம் முயற்சி எடுத்தது. ஆனால், மத்திய அரசின் அதிகப்படியான இறக்குமதி வரி இதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. இதற்கிடையே, மத்திய பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கான வரிகள் கணிசமாக குறைக்கப்பட்ட நிலையிலும், பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது எலான் மஸ்கை சந்தித்து பேசிய நிலையில், தற்போது இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய சந்தையை மின்சார வாகனங்கள் மெல்லமெல்ல ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள நிலையில், டெஸ்லா போன்ற வெளிநாட்டு தயாரிப்புகளின் வருகையால், வர்த்தகம் அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் நன்மையை தரக்கூடுமென கருதப்படுகிறது. மேலும், மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். இந்தப் பதவிகளுக்கான அதிக தேவையைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர் சேவை, விற்பனை மற்றும் வாகனத் துறைகளில் தொடர்புடைய அனுபவமுள்ள நபர்களை டெஸ்லா நிறுவனம் தேடி வருகிறது.