ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் இருந்து கேரளவுக்கு கொண்டு செல்லப்படும் பால், பல நாட்கள் பால் கெடாமல் இருப்பு வைப்பதற்காக “ஃபார்மோலின்” உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய கேரள பால்வளத்துறை சார்பில், தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் குமுளி சோதனைச்சாவடியில் தற்காலிக பால் பரிசோதனை ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆகஸட் 21ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகைக்கு கேரளாவில் பாயாசம் உள்ளிட்ட பால் தொடர்பான உணவுப் பொருட்கள் தயாரிக்க அதிக பால் தேவை உள்ளது. இதனால் அதிகப்படியான பால் தமிழகத்தில் இருந்து கொண்டு சென்று முன் கூட்டியே இருப்பு வைக்கும் நோக்கில், பால் கெடாமல் இருக்க “ஃபார்மோலின்” உள்ளிட்ட உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் மற்றும், பாலில் செயற்கையான கொழுப்பு சத்து உருவாக்கும் யூரியா, சோப்பு காரம், போன்றவை பாலில் கலப்பதை வியாபாரிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதைத் தடுக்கும் நோக்கில் ஓணம் பண்டிகையின்போது, தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி உட்பட பாலக்காடு, செங்கோட்டை, வால்பாறை, பாறசாலை சோதனைச்சாவடிகளில் இந்த தற்காலிக ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

இந்த ஆண்டு தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில், கொரோனா பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு முகாம் நடந்து வருவதால், குமுளிக்கு பதிலாக இந்த ஆண்டு கம்பம்மெட்டில் கேரள பால்வளத்துறை, இடுக்கி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தற்காலிக ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பால் கொண்டு செல்கின்ற “டேங்கர்” லாரிகளில் இருந்து பால் “மாதிரிகள்” எடுக்கப்பட்டு அவை தற்காலிக ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ரசாயன கலப்பில்லை என்று தெரிந்தால் மட்டுமே, அவை கேரளாவிற்குள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த சோதனை ஓணம் பண்டிகையின் முதல் நாளான ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை நான்கு நாட்களும், 24 மணி நேரமும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.