


கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் பள்ளிக்கு வந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவருக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், மாணவிக்கும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று பள்ளிக்கு கழுத்தில் தாலிக்கயிறுடன் மாணவி வந்ததால், இதைப் பார்த்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ – மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த மாணவியை அழைத்து ஆசிரியர்கள் விசாரித்தபோது, நேற்றுதான் தனக்கு திருமணம் நடந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, ஆசிரியர்கள் உடனே சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், அங்கு வந்த குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவி மற்றும் மணமகனின் பெற்றோர், மணமகன் ஆகிய 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

