
பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க கோரி அவரது தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும்,விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி,கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் ஜன.19 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து,மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது.மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் மத மாற்ற அழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது.ஆனால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து,தஞ்சையின் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை வேலுவிடம்,தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையில்,மாணவி தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.இதனையடுத்து,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில்,இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாகவும்,இதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் தமிழக அரசு வாதிட்டது.
இதனையடுத்து,தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க கோரி மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மேலும்,அது வரை சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
