புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியத் துறையில் முத்திரை பதிக்கும் படைப்பாளிகளுக்கு ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான 3-ஆம் ஆண்டு விருதுப் பட்டியலை தமிழ்ச் சங்கம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
பட்டியல் வெளியீடு

புதுக்கோட்டை பெருங்கொண்டான் விடுதியில் உள்ள சீனு சின்னப்பா மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை தாங்கினார். மூத்த எழுத்தாளர் நா. முத்துநிலவன் விருதுப் பட்டியலை வெளியிட, வாசகர் பேரவைச் செயலர் பேரா. சா. விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.
விருது பெறுவோர் விவரம்:
பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள் மற்றும் படைப்பாளிகளின் விவரம் வருமாறு:
- நாவல்: ‘கூத்தின் சுவாசம்’ – சி. அன்னக்கொடி.
- சிறுகதை: ‘கோணவாச்சி’ – ஆங்கரை பைரவி.
- புதுக்கவிதை: ‘மகள் கையளித்த மயிற்பீலிகள்’ – துஷ்யந்த் சரவணராஜ்.
- மரபுக்கவிதை: ‘செந்தமிழ் உணர்வுப்பூக்கள்’ – புலவர் நாவை சிவம்.
- மொழிபெயர்ப்பு: ‘இஸ்தான்புல்லின் இரகசியக் கனவுகள்’ – கயல்.
- ஹைக்கூ: ‘கருவானிலொரு சிறுகீறல்’ – ஆழ்வார்குறிச்சி ப. சொக்கலிங்கம்.
- சிறார் இலக்கியம்: ‘வானி’ (இளையோர் நாவல்) – ஈரோடு சர்மிளா.
- கட்டுரை (சமூகம்): ‘சோறு- உணவு அரசியல்’ – கோ. லீலா.
- கட்டுரை (கலை): ‘கடல் தாண்டிய சொற்கள்’ – இன்பா.
- சிறந்த சிற்றிதழ்: ‘சிறுகதை’ (காலாண்டிதழ்) – உதயசங்கர், மணிமாறன்.
மே 2-ல் விழா
இந்த விருதுகள் வழங்கும் விழா வருகிற மே மாதம் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) புதுக்கோட்டை மஹராஜ் மஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழாவில் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விருதுகளை வழங்கிப் பேருரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்ச் சங்கச் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.



