நாளை காலை முதல் தமிழகம் முழுவதும் ஆவினுக்கு வழங்கக்கூடிய பால் நிறுத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதனால் ஆவின் பால் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டலினை சந்தித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் நாசருடன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், நாளை முதல் பால் நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கப்படாது என்றும் பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் ஆவினுக்கு 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும். தனியார் பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.10 கூடுதலாக அளித்து வாங்கி கொள்வதாக கூறியுள்ளது. எனவே அதைப்போல் அரசு வழங்க வேண்டும் என்றும், நாளை முதல் ஆவினுக்கு பால் அளிக்காமல், தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அதேபோல், பசும் பாலிற்கு 35 ரூபாயில் இருந்து 42 ரூபாய், எருமை பால் ரூ.44இல் இருந்து 51 ரூபாயாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசு அழைத்து பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.