• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு கராத்தே வீரர்கள் 32 பதக்கங்கள் வென்று சாதனை.,

ByPrabhu Sekar

Oct 7, 2026

சென்னை: கோவாவில் நடைபெற்ற 2026 இந்தோ–ஸ்ரீலங்கன் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹகுரியூ ஸ்போர்ட்ஸ் கராத்தே-டோ அசோசியேஷன் வீரர்கள் சிறப்பாக விளையாடி 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தமிழக வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், ஹகுரியூ ஸ்போர்ட்ஸ் கராத்தே-டோ அசோசியேஷன் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு 15 தங்கம், 9 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களை கைப்பற்றினர்.

பல்வேறு வயது மற்றும் எடைப் பிரிவுகளில் நடைபெற்ற தனி கட்டா, தனி குமித்தே, அணி கட்டா மற்றும் அணி குமித்தே உள்ளிட்ட போட்டிகளில் வீரர்கள் தங்களது திறமை, கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தினர்.

இளம் வீரர்களின் தொடர் பயிற்சி மற்றும் கடின உழைப்புடன், அவர்களது பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

போட்டியில் வெற்றி பெற்று சென்னை விமான நிலையம் திரும்பிய கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஹகுரியூ ஸ்போர்ட்ஸ் கராத்தே-டோ அசோசியேஷன் சார்பில் பயிற்சியாளர்கள் பிரபாகரன், வேகநாகராஜன், ஜெகதீசன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பதக்கங்களுடன் சென்னை திரும்பிய இளம் கராத்தே வீரர்களை பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக வீரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.