மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் ராம்ராஜ் பேசும்போது,
420 கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் கிராம மற்றும் நகர்புறங்களில் உள்ள குழுக்களுக்கும் என மொத்தம் ஆறு வகையான குழுக்கள் இருக்கின்றன. இதில் 5000க்கும் மேற்பட்ட அலுவலர்கள், அலுவலர்கள் அல்லாதவர்களும் உள்ளனர். அனைவருக்கும் பயிற்சி அளிப்பதே இக்குழுவின் நோக்கம்.
ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும், மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு மேல் அரசு அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் அல்லாதவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரியாக குழந்தை பாதுகாப்பு குழுக்கள் மதுரை மாவட்டத்தில் செயல்படும் என்பதே இதன் நோக்கம். இதன்மூலம் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க முடியும். குறிப்பாக குழந்தை தொழிலாளர், சிறுவயதிலேயே கர்ப்பம், மற்றும் குழந்தை திருமணம், சிசுக்கொலை போன்றவற்றை தடுக்க முடியும்.
மேலும் மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேர் 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வருங்காலங்களில் குழந்தைகளுக்கு எதிராக 3 பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன. இணையதளத்திற்கு அடிமை, போதைப் பழக்கத்திற்கு அடிமை மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்கள். இவைகள் கலைக்கப்பட்டால் மட்டுமே வளமான சமூகத்தை உருவாக்க முடியும்.
மேலும் குழந்தை பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும், சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் சட்ட அங்கீகாரம் கிடைக்கும். வருங்காலங்களில் சிறப்பான பணிகளைச் செய்யலாம். மேலும் இதனால் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை முற்றிலுமாக தடுக்கலாம் என கூறினார்.