• Sat. Apr 27th, 2024

முல்லைப்பெரியாறு அணையில்.., வாகனம் நிறுத்துமிடம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு..!

Byவிஷா

Oct 18, 2023

கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையில் வாகனம் நிறுத்துமிடம் அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி வனவிலங்கு சரணாலயதிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு முல்லை பெரியாறு அணை நீர் தேக்கத்திற்கு ஒரு கிமீக்கு அப்பால் கார் பார்க்கிங் அமைந்துள்ளது. இந்த கார் பார்க்கிங் தேசிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ள இடத்திற்கு அருகே இருப்பதால், வாகனங்கள் எழுப்பும் சத்தம் வனவிலங்குகளை குறிப்பாக புலிகளை அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது என வனத்துறை கேரள அரசிடம் கூறியுள்ளது.
இதனையடுத்து முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பிரமாண்ட கார் பார்க்கிங் அமைக்க 2013ஆம் ஆண்டே கேரள அரசு முயற்சி மேற்கொண்டது. கேரளாவில் முல்லை பெரியாறு அணை இருந்தாலும், அதனால் தமிழகமும் பயனடைந்து வருவதால் தமிழகத்திற்கும் அதில் குறிப்பிட்ட அளவு உரிமை உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், முல்லை பெரியாறு அணை நீர்த்தேக்க பகுதியில் பிரமாண்டமாக வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க கேரள அரசு தேர்வு செய்துள்ள இடம் தமிழக அரசுக்கு ஒப்பந்தத்திற்கு அளித்துள்ள நிலம். அதில் தமிழக அரசு அனுமதியில்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ள கூடாது என்பது தமிழக அரசின் வாதம்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. குறிப்பிட்ட பகுதியில் கார் பார்க்கிங் அமைத்தால் அது அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் செய்துவிடும். இதனால் நீர் தேக்கம் பாதிக்கப்படும் என குறிப்பிட்டது.
இந்த வழக்கு நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற மேற்பார்வை குழு தலைமையில் நில அளவு தொடர்பாக அளவீடு செய்ய ஒரு கூட்டு குழு ஆய்வு நடத்தப்படும் என்றும், அந்த அறிக்கை வரும் நவம்பர் 20ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இந்த நில அளவு கூட்டு ஆய்வு தொடர்பாக இரு மாநில அரசும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *