• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பத்திரப்பதிவில் தமிழக அரசு அதிரடி மாற்றம்

Byவிஷா

May 1, 2025

இனி பத்திரப்பதிவு செய்ய அசல் ஆவணங்கள் கட்டாயம் என தமிழக அரசு பதிவுத்துறையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிக அளவில் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. வீடுகளை சுற்றி இருந்த விவசாய நிலங்கள் தற்போது வீடுகளாக மாறி வருகிறது. மேலும் தரிசு நிலங்கள், விவசாய பயன்பாட்டுக்கு ஒத்து வராத நிலங்கள் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு பிரிக்கப்படும் நிலங்கள் பத்திரப் பதிவுத் துறை மூலம் பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் வீடுகள் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும் பத்திரப் பதிவுத் துறை மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றப்படுகிறது. பின்னர் அது வருவாய்த்துறை சார்ந்த ஆவணங்களில் பதியப்படுகிறது.
போலி ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பத்திரப் பதிவின் போது அசல் உரிமை மூல ஆவணத்தை தாக்கல் செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி இதனை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி அசையா சொத்து தொடர்பான ஆவணத்தை பதிவு செய்யும் போது சொத்தின் மீது உரிமை உடைய முந்தைய அசல் ஆவணம் மற்றும் ஆவணம் பதிவு செய்யும் தேதிக்கு முன்னதாக 10 நாட்களுக்குள் பெறப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் அந்த பதிவு ரத்து செய்யப்படும். மேலும் முறையாக அது பதிவு செய்யக்கூட ஏற்றுக் கொள்ளப்படாது.
ஒருவேளை பதிவு செய்யும் சொத்து முன்னோர்களின் சொத்தாக இருந்து. அதற்கான அசல் ஆவணங்கள் இல்லாத நிலையில் அந்த சொத்து தொடர்பாக வருவாய்த்துறை வழங்கி இருக்கும் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும். இல்லையென்றாலும் அந்த ஆவணம் பதிவு செய்ய ஏற்கப் படாது. ஒருவேளை அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டால் ஆவணம் தொலைந்து போன போது வெளியான நாளிதழ் அறிவிப்புகள், விளம்பரங்கள், காவல்துறையால் வழங்கப்பட்ட ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என அந்த சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.