• Mon. Mar 24th, 2025

கனமழையால் மஞ்சள் எச்சரிக்கை – 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்

ByP.Kavitha Kumar

Feb 27, 2025

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மாா்ச் 1-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 28) கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த 12 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள் வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்” என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.