டெல்லியில் நடைபெறும் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நவ. 14முதல் 27-ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ‘சுயசார்புஇந்தியா’ என்ற கருப்பொருளில் நடைபெறும் 40-வது இந்தியப் பன்னாட்டுவர்த்தகப் பொருட்காட்சியை மத்தியஅமைச்சர் பியூஷ்கோயல் கடந்த 14-ம்தேதி தொடங்கி வைத்தார்.

இதில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், செய்தி, சுற்றுலா, வேளாண்மை, தோட்டக்கலை, தொழில்,மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தொழில்வளர்ச்சி நிறுவனம், கைத்தறி துறை, தொழில் முன்னேற்ற நிறுவனம், சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசு, அரசு சார்பு துறைகள் பங்கேற்று,தங்கள் வளர்ச்சித் திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளன. செய்தித் துறை சார்பில்அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படங்கள், உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த மாதிரி வடிவம் மக்களை மிகவும் கவர்ந்தது.
இந்த வர்த்தகப் பொருட்காட்சியின் தமிழ்நாடு அரங்கில் விடுதலைப் போரில் ஈடுபட்ட தமிழக பெண் தியாகிகளின்புகைப்படங்கள், முக்கிய தியாக சீலர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் சாமிநாதன், ‘‘தமிழக முதல்வரால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் பல்வேறு வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது”என்றார்.இப்பொருட்காட்சியில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநில நாள் விழாவை கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு நாள் விழா நேற்று பிரகதி மைதானத்தில் உள்ள லால்சவுக் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவை அமைச்சர் சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், டெல்லி சிறப்புபிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், உள்ளுறை ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி, செய்தித் துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.