மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் (44) என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமா(36), மகள் சுஷ்மிதா(13) ஆகிய மூவரும் சொந்த ஊரான மேட்டூருக்கு வந்துவிட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பொலிரோ ஜீப்பில் சென்று கொண்டிருந்த போது, கட்டுபாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுமார் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது.

கிணற்றில் விழுந்த வேகத்தில் காரின் பின்பக்க கதவு திறந்ததால் உமா காரில் இருந்து தண்ணீரில் விழுந்தார். தண்ணீரில் தத்தளித்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கிணற்றில் விழுந்த உமாவை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் கிரேன் உதவியுடன் வீரன் மற்றும் சுஷ்மிதாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அது தோல்வி அடைந்ததால் கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றி காரை வெளியே எடுத்தனர். ஆனால் வீரா மற்றும் அவரது மகள் காருக்குள்ளேயே உயிரிழந்தனர். அதை தொடர்ந்து வீரன், சுஷ்மிதாவின் உடல்களை, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.