• Fri. Apr 19th, 2024

டி 20 உலக கோப்பை – நியூசிலாந்தை விழ்த்தி அரை இறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிய பாகிஸ்தான்…

7ஆவது டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறியது. தொடக்க ஆட்டக்காரர் கப்தீல் 17 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய தொடங்கியது. இருப்பினும், டேரில் மிட்செல் 27, கேன் வில்லியம்சன் 25, டிவோன் கான்வே 27 என வீரர்கள் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடித்தது. பாகிஸ்தான் பௌலர் ஹரிஸ் ராஃப் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 9 ரன்களை மட்டும் எடுத்து அவுட்டாக, மறுமுனையில் முகமது ரிஸ்வான் 33 ரன்கள் சேர்த்து, நம்பிக்கையளித்தார். தொடர்ந்து பக்கர் ஜமான், முகமது ஹபீஸ், இமாத் வாசிம் ஆகியோர் தலா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஷோயிப் மாலிக் மற்றும் ஆஷிப் அலி ஆகியோர் இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடியதால், பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 135/5 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் அணி, பலமிக்க இந்தியா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தியுள்ளது. அடுத்து ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா போன்ற அணிகள் மட்டுமே இருக்கிறது. இதனால், பாகிஸ்தான் அணி 5-0 என்ற கணக்கில் லீக் சுற்றில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.

அடுத்த ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் பலத்த போட்டி நிலவுகிறது. இரு அணிகளும் ஒரு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அடுத்து அக்டோபர் 31ஆம் தேதி நேருக்கு நேர் சந்திக்கவுள்ளது. இதில் இந்தியா நிச்சயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *