• Fri. Mar 29th, 2024

ஷீனா போரா உயிரோடு தான் இருக்கிறார் – இந்திராணி முகர்ஜி அதிரடி

Byமதி

Dec 16, 2021

கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக அவரின் தாயார் இந்திராணி முகர்ஜி சிபிஐ-க்கு கடிதம் ஒன்றை எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவையே உலுக்கிய வழக்குகளில் ஒன்றாக திகழும் ஷீனா போரா கொலை வழக்கு, கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு திருப்பங்களை கண்டு, தனது மகளையே கொலை செய்ததாக ஊடகவியலாளர் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக இருந்ததாக இந்திராணியின் 3வது கணவரும் கைதாகி பிணையில் வெளிவந்தார்.

ஷீனா போரா (Sheena Bora) என்ற 24 வயது இளம்பெண் ஒருவர் மும்பையிலிருக்கும் மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்தில் செயல் பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் ஊடகத் துறையில் பிரபலமாக விளங்கிய இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகியோரது மகள் ஆவார். சீனா போராவிற்கு மெக்கேல் போரா என்ற ஒரு தம்பியார் இருக்கின்றார். சீனா போரா தனது தாயாரான இந்திராணி முகர்ஜியின் மூன்றாவது கணவரும், ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலராக பணியாற்றிய பீட்டர் முகர்ஜியின் முதலாவது மனைவியின் மகனான ராகுல் முகர்ஜியை காதலித்தும் வந்தார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 முதல் அவர் காணாமல் போனார், அதன் பின் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2015-யில் அநாமதேயர் ஒருவரால் வழங்கப்பட்ட துப்பின் அடிப்படையில் மும்பை காவல்துறையினர் அவருடைய தாயாரான இந்திராணி முகர்ஜியை சீனா போராவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். அவருடன் இந்திராணி முகர்ஜியின் இரண்டாவது கணவரான சஞ்சீவ் கண்ணா மற்றும் வாகன ஓட்டுநர் சியாம்வர் பிந்துராம் ராய் ஆகியோரையும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர் என கைது செய்தனர். 2019ம் ஆண்டு பீட்டர் இந்திராணியை விவாகரத்து செய்ய, 2020ம் ஆண்டு சிறையில் இருந்து பிணையில் வெளிவந்தார். இந்திராணி தற்போதும் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக அவரின் தாயார் இந்திராணி முகர்ஜி சிபிஐ-க்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஷீனா போரா காஷ்மீரில் இருப்பதாக அவர் சிபிஐக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் பரபரப்படைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ளதாக சிபிஐ அறிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *