• Mon. Apr 29th, 2024

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரவிழா.., அரோகரா கோசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

ByKalamegam Viswanathan

Nov 18, 2023

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13 ஆம் தேதி கந்தசஷ்டி விழா காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 5 ஆம் நாளான நேற்று சுப்பிரமணிய சுவாமி கோவர்தனாம்பிகையிடம் சக்தி வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹார லீலையில் சுப்பிரமணியசுவாமி தங்கமயில் வாகனத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளைக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி மேலரத வீதி, கீழரத வீதி வழியாக சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு அசுரனான பத்மாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.

பின்பு சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று மாலை மற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்பு சுவாமி அம்பாளுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *