• Sat. Apr 20th, 2024

பேரறிவாளன் விடுதலை தீர்மானம் குறித்து ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Byகாயத்ரி

Dec 7, 2021

பேரறிவாளனை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 2018ல் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழக அரசு தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதம் செய்வதாக கூறியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என கோரியும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டி ஜெனரல், இந்த வழக்கினை ஒரு வார காலம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


தமிழக அரசு தரப்பில், 7 பேர் விடுதலை வழக்கில் ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களை பொறுத்தவரை, கடந்த 30 ஆண்டுகாலமாக சிறையில் உள்ளதால் அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கான உத்தரவை உச்சநீதிமன்றமே பிறப்பிக்க வேண்டும்.ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார் என தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் விவகாரத்தில் அவரை விடுதலை செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றிய முடிவை ஆளுநர் எடுத்துக் கொள்ளலாம்; அவருக்கு அதிகாரம் இருக்கிறது என்ற உத்தரவை கடந்த 2018ம் ஆண்டு நாங்கள் பிறப்பித்திருக்கிறோம். ஆனால் ஆளுநர் ஏன் இதுவரை முடிவெடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.


தொடர்ந்து, பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்புடையது அல்ல என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஒன்றிய அரசு சார்பில் அவகாசம் கோரியதால் பேரறிவாளனை விடுவிக்க கோரும் வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

அச்சமயம் இந்த வழக்கை ஒத்திவைக்க கோரக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்திருக்கிறது. ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வரும் போது பேரறிவாளன் விடுதலை தொடர்பான முடிவை உச்சநீதிமன்றம் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *