ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேரும் மன்னிப்பு கோரினால், சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், சஸ்பெண்ட்டை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே திரும்ப பெறப்படும் என மத்திய அரசும், அவைத்தலைவர் வெங்கையாநாயுடுவும் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், டில்லியில் நடந்த பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, எம்.பி.,க்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறித்து விரிவாக விளக்கி உள்ளோம். பார்லிமென்டில் நடந்த நிகழ்வுகளை மக்கள் பார்த்துள்ளனர். இன்று அவர்கள் மன்னிப்பு கேட்டால் கூட, அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம் என அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.