உக்ரைனிலிருந்து 242 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் AI1946, நேற்றிரவு 11.30 மணியளவில் டெல்லி வந்தடைந்தது.
போர் பதற்றம் நிலவி வருவதால் உக்ரைனிலிருந்து தற்காலிகமாக வெளியேறும்படி தூதரகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து, அதிகளவிலான மாணவர்கள் விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளனர்.
மாணவர்களின் வருகையை முன்னிட்டு, டெல்லி விமான நிலையத்தில் பெற்றோர்கள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
இந்தியா திரும்பிய உக்ரைனில் கார்கிவ் நகரில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர் துருவ் மல்ஹோத்ரா கூறியதாவது, ‘தற்போது அமைதியாக தான் உள்ளது. கார்கிவ் மற்றும் கிய்வில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஆனால், பதற்றம் அதிகரித்து வருவதன் காரணமாக, நாங்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டோம்’ என்றார்.
தொடர்ந்து, டெல்லியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் முகமது அல்ஃபைஸ் கூறுகையில், ‘உக்ரேனியர்களிடையே அதிக பதற்றம் இருப்பதாகத் தெரிகிறது. இதுவரை நிலைமை சாதாரணமாக உள்ளது, ஆனால் மாணவர்களிடைய கவலை உள்ளது’ என்றார்.
மற்றொரு மாணவர் முகமது ஜீஷன் கூறுகையில், ‘இனிமேல் வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். இதனால், செய்முறை கல்வி பாதிக்கப்படும். நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மட்டுமே, எங்களால் மீண்டும் செல்ல முடியும். எங்கள் நண்பர்களும் விரைவில் தாயகம் வருவார்கள். விமான கட்டணங்கள் அதிகமாக இருக்கிறது’ என்றார்.
டெர்னோபில் நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் இருந்து திரும்பிய நிகிதா சோனிபட்டில் என்பவரின் தந்தை ஹர்விந்தர் சரோஹாவும் விமான டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது, ‘ பொதுவாக ரூ.26,000 ஆக இருக்கும் டிக்கெட்டுகளின் விலை தற்போது ரூபாய் 66 ஆயிரமாக உள்ளது. எங்களால் டிக்கெட்டைப் பெற முடிந்தது. ஆனால், மற்றவர்களுக்கு கடினமாக இருக்கலாம். எனது மகள் தங்கியிருந்த பகுதியில், எவ்வித பிரச்சினையும் இல்லை. கெய்வில் இருந்து 400 கிமீ தொலைவில் வசிக்கிறாள். விமானத்தில் ஏறுவதற்காக கிய்வ் வந்தபோது எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.
ஏர் இந்தியா மட்டுமின்றி பிற விமானங்களிலும் மாணவர்கள் இந்தியா வந்தனர். துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் குஜராத்தை சேர்ந்த திவ்யம், நீரவ் படேல் வந்திறங்கினர். அவர்கள் கூறுகையில், ‘எல்லையில் நிலைமை எப்படி இருந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. தூதரகம் வெளியேறுமாறு அறிவுரை வழங்கியது. அதன்படி நாங்கள் வந்துள்ளோம். இனிமேல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றார்.
பிப்ரவரி 20 அன்று கிய்வில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைனில் இருப்பது அவசியமில்லாத அனைத்து இந்திய குடிமக்களும், மாணவர்களும் தற்காலிகமாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது.
தொடர்ந்து, தூதரகம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், ஆன்லைன் வகுப்புகள் குறித்து பல்கலைக்கழகங்களில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்காமல், இந்திய மாணவர்களை தற்காலிகமாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.