• Fri. Apr 26th, 2024

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக 3 மாதங்களாக சிறையில் வாடும் மாணவர்கள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான மாணவர்கள் அர்ஷத் யூசுஃப், இனியாத் அல்தாஃப் மற்றும் சௌகத் அகமது கனய். இவர்கள் மூவரும் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவிலுள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

இதனையடுத்து இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அணியின் வெற்றியை மூன்று மாணவர்களும் வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்திகள் பகிர்ந்து கொண்டாடியுள்ளனர். இந்த குறுஞ்செய்திகள் காட்டுத்தீ போல பரவியதையடுத்து ஆக்ரா போலீசார் மூன்று மாணவர்களையும் அக்டோபர் 27ம் தேதி கைது செய்தனர். மூவர் மீதும் இணைய பயங்கரவாதம்,தேசத்துரோகம்உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆக்ரா சிறையில் அடைத்தனர்.

சமூக வலைத்தளங்களின் மூலமே இதுதொடர்பான தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், அவர்களை ஜாமீனில் எடுக்கக் கடந்த 3 மாதங்களாகப் போராடி வருகின்றனர். மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டதில்லை என்ற அவர்கள், கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் என கூறி புகாரை வாபஸ் வாங்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், அதற்கு உத்தர பிரதேச அரசு செவிசாய்க்கவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ஆக்ராவைச் சேர்ந்த எந்த வழக்கறிஞரும் ஆஜராகாத நிலையில் அண்டை மாவட்டமான மதுராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகியுள்ளார். மாணவர்களின் பெற்றோர் ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் ஆக்ரா நீதிமன்றம் இதுவரை 8 முறை அதனை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *