• Fri. Apr 19th, 2024

எடப்பாடி ஆட்சி தங்கம் இந்த ஆட்சி தகரம் – கொந்தளிக்கும் கப்பல் நிர்வாகம்

தமிழகத்தில் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கும், மத்திய அரசு நிறுவனமான என்.டி.பி.சிக்கும் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின் நிலையங்களில் முக்கிய எரி பொருளாக பயன்படுத்தப்படும் நிலக்கரியை மத்திய அரசின் நிறுவனமான” கோல் இந்தியா ” வழங்குகிறது. ஒரிஸ்ஸா, சட்டீஸ்கரில் கோல் இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக்கரிபாரதீப், விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கப்பல்களில் ஏற்றப்பட்டு எண்ணூருக்கும், தூத்துக்குடிக்கும் எடுத்துவரப்படுகிறது.

தமிழக அரசிடம் சொந்தமாக இருந்த கப்பல்களுக்கு வயதாகி விட்டதால் அவைகள்விற்கப்பட்டு, தற்போது கப்பல்களைவாடகைக்கு எடுத்து தமிழக அரசுபயன்படுத்திவருகிறது. தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கும், மத்திய அரசின் என்.டி.பி.சி நிறுவனத்திற்கும் தேவையான கப்பல்களை வாடகைக்கு ஒப்பந்தம் செய்து தரும் பணியை தமிழகஅரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் செய்துவந்தது. இந்நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துடனான ஒப்பந்தத்தை முறித்துகொண்டு தமிழ்நாடுமின் சாரவாரியம் சுயமாக கப்பல்களை வாடகைக்கு அமர்த்திகொள்கிறது.

மத்திய அரசின் என்.டி.பி.சி நிறுவனத்திற்கு வாடகைக்கு கப்பல்களை அமர்த்திகொடுக்கும் பொறுப்பை மட்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் தற்போது செய்துவருகிறது.

இந்நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் கப்பல்களை இயக்கும் நிறுவனங்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்துகொள்ள கொல்கட்டாவை தலைமையிடமாககொண்டு செயல்படும் கப்பல் நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியை தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசியஅவர்., ” எங்கள் நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்குகப்பல்களை இயக்கிவருகிறது. பூம்புகார்கப்பல் போக்குவரத்துகழகம் வாடகையை நிர்ணயிக்கும்போது உலகளவில் என்ன வாடகை கொடுக்கப்படுகிறதோ, அதே வாடகைக்கு தான் கப்பல்களை ஒப்பந்தம் செய்யும். வாடகை ஒப்பந்தத்தில் எவ்வித மறைமுக அஜெண்டாவும் இருந்ததில்லை.


இதுவரை இந்த துறைக்கு அமைச்சர்களாக இருந்தவர்களோ, நிர்வாக இயக்குநர்களாக இருந்தவர்களோ எவ்வித லஞ்சமும் கேட்டதில்லை. நாங்கள் வாடகைக்கு கப்பல்களை இயக்குவோம், அவர்கள் வாடகையை கொடுப்பார்கள், இதுதான் நடைமுறையாக இருந்தது. ஆனால் எப்போதும் இல்லாத நிகழ்வாக, திடீரென்று அமைச்சரின் உதவியாளர் என்ற பெயரில் ஒருவர் எங்களை தொடர்புகொண்டு, மாதம்தோறும் கட்சிநிதியாக ஒருபெரும் தொகையை தர வேண்டும் என்று கேட்டபோது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும்இருந்தது.

இதுபற்றி பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக நிறுவனத்திற்கு தெரிவித்தபோது, அமைச்சரின் உதவியாளர் ‘கிரீன்சிக்னல்’ கொடுத்தால் மட்டுமே மாதவாடகை தரப்படும் என தெரிவிக்கப்பட்டபோது கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நெடுஞ்சாலைதுறையின் கீழ் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த துறைக்கு அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதற்கு முன்பு அமைச்சர்களாக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன், தா. கிருஷ்ணன் என எவருமே எங்கள் நிறுவனத்திடம் இப்படி லஞ்சம் கேட்டதில்லை. கப்பலை வாடகைக்கு விடுவது என்பது மற்ற காண்ட்ராக்டுகள்ல போல அல்ல என்பதை அமைச்சரின் உதவியாளர் புரிந்துகொள்ளவில்லை. லஞ்சம் கொடுத்து தான் கப்பல்களை வாடகைக்கு இயக்க முடியும் என்றால் இந்த ஒப்பந்தமே எங்களுக்கு தேவையில்லை” என்றார் காட்டமாக. இதுகுறித்து அறிந்துகொள்ள பூம்புகார் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியை தொடர்புகொண்டோம். பெயர் வெளியிட விரும்பாத அவரோ, ” அமைச்சர் எ.வ. வேலுவின் உதவியாளர் ராஜ்குமார் என்பவர் எங்களை தொடர்புகொண்டு, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 10 ஆண்டுகாலம் கட்சிக்காக பணத்தை தண்ணீராய் செலவழித்தவர் எ.வ. வேலு. அவ்வளவு பணத்தையும் 5 ஆண்டுகளில் எடுத்தாகவேண்டும். எனவே மாதம்தோறும் கப்பல் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வாடகையிலிருந்து இரண்டு கோடி ரூபாயை வசூலித்து தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். சாதாரண அரசு ஊழியர்களான நாங்கள் என்னசெய்யமுடியும்” என்றார் வெள்ளந்தியாக.

இதுகுறித்து அறிந்துகொள்ள தமிழகத்தை சார்ந்த கப்பல் நிறுவனத்தின் பிரதிநிதியிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அந்த கப்பல் நிர்வாகி, ” நீங்கள் சொல்வது உண்மைதான். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிறுவனம் மத்திய அரசின் என்.டி.பி.சி நிறுவனத்திற்கு கப்பல்களை ஒப்பந்தம்செய்து தரும் ஏஜென்சி வேலையை மட்டுமே தற்போது செய்துவருகிறது.

இதற்காக என்.டி.பி.சி. நிறுவனம் மாதம்தோறும் ஒரு கோடி ரூபாயை சேவை கட்டணமாக பூம்புகார் நிறுவனத்திற்கு வழங்கிவருகிறது. எங்களுக்கு தரப்படும் வாடகையும் மத்திய அரசிடமிருந்துதான் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிறுவனத்திற்கு வருகிறது. இதில் கமிஷன் கேட்பதற்கோ, பங்கு கேட்பதற்கோ தமிழக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கோ, அவர்களின் உதவியாளர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஏனென்றால் இதில் தமிழக அரசின் நிதிபங்களிப்பு எதுவும் இல்லை. இதுகுறித்து விவாதிப்பதற்காக பூம்புகார் நிறுவனத்திற்கு கப்பல்களை வாடகைக்கு இயக்கும் கப்பல் உரிமையாளர்கள் கலந்துகொள்ளக்கூடிய ஆலோசனைகூட்டம் இந்த மாத இறுதியில் சென்னையில் நடக்கவுள்ளது. அந்த கூட்டத்தில் அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டு மத்தியஅரசு நிறுவனமான என்.டி.பி.சியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் .

இதுகுறித்து டெல்லியில் உள்ள என்.டி.பி.சி நிறுவனத்தின் உயரதிகாரியான இயக்குநர்(உற்பத்தி)ரமேஷ்பாபுவிற்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. விரைவில் என்.டி.பி.சி நிர்வாகமே நேரடியாக கப்பல்களை வாடகைக்கு ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதிகூறி இருக்கிறார். அதனால் யாருக்கும் நயாபைசா வழங்க முடியாது ” என்றார் எரிச்சலோடு.
ஊழலை ஒழிப்பேன் என மேடைதோறும் முழங்கும் தமிழக முதல்வர் ஊழலின் ஊற்றுகண்ணாய் திகழும் அமைச்சரின் உதவியாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா.?என்பதை காலம் தான் தமிழக மக்களுக்கு சொல்லவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *