விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கர் செவல், முத்துசாமி புரம், விஜய கரிசல்குளம், எம்.துரைச்சாமிபுரம் ,மம்சாபுரம், புலிப்பாறைப்பட்டி ,கிளியம்பட்டி, காக்கி வாடான்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கத்திரிக்காய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டு 45 வது நாளில் இருந்து அறுவடை செய்யப்படுகிறது.

குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடியது என்பதால் இப்பகுதியில் தொடர்ந்து கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கிணற்று பாசனம் மூலம் நடைபெறும் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராகி கொண்டிருந்தது. போதுமான மழை பெய்யாததால் வைரஸ் நோய் தாக்கியது. கத்திரிக்காய் செடிகள் வேர்கள் முழுமையாக அழுகியதால் கத்திரிக்காய் நல்ல பலன் தராது என்பதால் டிராக்டர் மூலம் செடிகளை முழுமையாக அழித்தனர்.
இதுகுறித்து கங்கர் செவல் விவசாயி பரந்தாமன் கூறியது
சந்தையில் தினந்தோறும் தேவைப்படக்கூடிய கத்திரிக்காய் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறோம். வேலைக்கு அதிகமான ஆட்கள் தேவைப்படாத நிலையில் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு கத்திரிக்காய் பறிக்க முடியும். இந்த நிலையில் பயிரிடப்பட்ட நாளிலிருந்து போதுமான மழை பெய்யாததால் செடிகளில் வைரஸ் நோயும் தாக்கியதால் செடிகள் வீணாக தொடங்கி விட்டன.

இதனால் கத்திரிக்காய் அறுவடை செய்ய முடியாது என்பதால் டிராக்டர் மூலம் அழிக்க முடிவு செய்யப்பட்டு செடிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் பெரிதும் நஷ்டமடைந்துள்ளோம் இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.