


ராஜஸ்தான் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் கொடுமை செய்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதலாமாண்டு மாணவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், துன்கார்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கடந்த மே 15ம் தேதி, முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் கொடுமை செய்துள்ளனர். கல்லூரியின் அருகே முதலாமாண்டு மாணவரை கடந்த மாதம் 300க்கும் அதிகமான முறை தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். இதில், சிறுநீரக அழுத்தம் ஏற்பட்ட முதலாமாண்டு மாணவர் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவருக்கு 4 முறை டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலாமாண்டு மாணவர் கல்லூரிக்கு எவ்வித புகாரும் அளிக்காமல் இருந்த நிலையில், ஜூன் 20ம் தேதி கல்லூரியின் இ-மெயிலுக்கு இது குறித்து புகார் வந்துள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் நடத்திய விசாரணையில் ராகிங் கொடுமை உறுதி செய்யப்பட்டதால், காவல்துறையில் 7 சீனியர் மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைப்படி 7 மாணவர்களையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

