சேலத்தில் தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலர், இதுவரை தரமற்ற 22 கேன் ஆயில் மற்றும் 70 கிலோ ஜாங்கிரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு விற்பனை களை கட்ட துவங்கி உள்ளது. இந்த நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் பலகாரம் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு, காரம் உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
பின்னர் சேலம் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசியதாவது.,
வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட செயற்கை நிறமிகளை அதிகம் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் உணவு தரத்தை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தரமற்ற இனிப்பு வகைகளை தயாரிப்போர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர் இதுவரை நடைபெற்ற சோதனையில் 22 கேன் தரமற்ற ஆயில் மற்றும் 70 கிலோ ஜாங்கிரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.