• Sat. Apr 20th, 2024

தென்கொரியாவில் பிரபலமாகியுள்ள வினோத மாஸ்க்!

தென்கொரியாவில் மூக்கு பகுதியை மட்டும் மூடிவிட்டு, வாய் பகுதியை அப்படியே விட்டுவிடும் வகையில் புது வடிவ மாஸ்க் ஒன்றை தயார் செய்துள்ளது அட்மான் என்ற நிறுவனம். கொரோனா இன்னும் உலகை விட்டு முழுமையாக நீங்காத நிலையில், அதன் வேறுபாடுகள் உள்ள வைரஸ்கள் வரத்தொடங்கியுள்ளன! கொரோனா வந்த நாள் முதல் இன்று வரை, அதை எதிர்கொள்ள வித விதமான தடுப்பூசிகள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் என கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன!

அத்தகைய கொரோனாவின் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று தான், மாஸ்க் என்னும் முகக்கவசம்! பள்ளி, கல்லூரிகள், பணியிடங்கள், மருத்துவமனை மற்றும் பீச், தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்கள் என எங்கு சென்றாலும் 2 ஆண்டுகளாக தவறாமல் நம்முடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பொருள் மாஸ்க் தான். மாஸ்க் அணிவதன் முக்கிய பிரச்னையாக கருதப்படுவது, இந்த மாஸ்க் போட்டுக் கொண்டு வெளி இடங்களில் எப்படி சாப்பிடுவது, தண்ணீர், கூல்டிரிங்க்ஸ் எப்படி குடிப்பது? என்பதுதான்!

அதற்கு தான் விடை தருகிறது தென் கொரிய நிறுவனங்களின் புதிய வகை மாஸ்க் ஒன்று! அதற்கு பெயர்தான் ‘கோஸ்க்’. கோ என்றால் தென்கொரிய மொழியில் மூக்கு என்று அர்த்தமாம். அதை மாஸ்க் உடன் இனைத்து கோஸ்க் என பெயர் வைத்துள்ளார்கள்.

மூக்கு பகுதியை மட்டும் மூடிவிட்டு, வாய் பகுதியை அப்படியே விட்டுவிடும் வகையில் இந்த மாஸ்க்கை தயார் செய்துள்ளது அட்மான் நிறுவனம். ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். கே.எஃப்.80 என்ற பெயரில் ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக இது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்றொரு வடிவமைப்பு கொண்ட கோஸ்க், எப்போதும் போல முகத்தையும், வாயையும் மூடும் வகையில் இருக்கும். ஆனால், அதை வாடிக்கையாளர்கள் மடித்துக் கொள்ளலாம். இந்த கோஸ்க் குறித்த செய்தி, கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என கருதும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது. சுமார் 0.3 மைக்ரான் அளவு சிறிய துகள்களையும், கிருமிகளையும் தடுக்கக் கூடிய அளவில் 80 சதவீத செயல்திறன் கொண்டதாக இந்த கோஸ்க் இருக்கிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *