• Thu. Mar 28th, 2024

இனி ஒரு டோஸ் போதும்..கவலை வேண்டாம்

Byகாயத்ரி

Feb 7, 2022

ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஸ்புட்னிக் லைட் ஒரு தவணை தடுப்பூசிக்கு டிசிஜிஐ அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கி இருப்பதை உறுதி செய்துள்ளார். ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட 9வது தடுப்பூசி என்றும் மாண்டவியா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியாவின் போராட்டத்தை ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மேலும் வலுப்படுத்தும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் கூறியுள்ளார். கொரோனா கிருமிக்கு எதிராக 65% மேல் பலன் தருவதாக ஸ்புட்னிக் லைட் பற்றிய ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றனர். ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணப்பித்து இருந்தது.

ஏனைய தரவுகள் சமர்பிக்கப்படாத நிலையில், மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு அனுமதி மறுத்து இருந்தது. இதையடுத்து ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல் திறன் தொடர்பான தரவுகள் அளிக்கப்பட்டதால் 3ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவசரகால பயன்பாட்டிற்கு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை பயன்படுத்த மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது அனுமதிஅளித்துள்ளது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ரஷியாவைச் சேர்ந்த கமலயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து பல்வேறு நாடுகளுக்கும் விநியோகித்து வருகிறது. இந்தியாவுடன் சேர்த்து இதுவரை 29 நாடுகளில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்திருப்பதாக கமலாயா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *