• Sat. Apr 20th, 2024

தேர்தல் முடிஞ்ச பிறகும் உஷாரா இருங்க …ஓபிஎஸ் இபிஎஸ் எச்சரிக்கை

வாக்குப்பதிவை அதிமுக முகவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 9 மாதங்களாக நடக்கும் திமுக ஆட்சியை பொதுமக்கள் எடைபோட்டு, தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் வழிவந்த அதிமுக ஆட்சியை எண்ணிப் பாருங்கள். அதிமுக ஆட்சி, தமிழக மக்களின் ஆட்சியாக, உண்மையான மக்களாட்சியாக திகழ்ந்ததை வரலாறு சொல்லும்.

நீட் தேர்வு ரத்து, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை, சமையல் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், விவசாயக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலைகுறைப்பு என பொய்யான வாக்குறுதிகள் மூலம் திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த 9 மாத ஆட்சியில், திமுகவினரின் வன்முறையும், அராஜகமும், அடாவடியும் எண்ணில் அடங்காதவை. நகர்ப்புற உள்ளாட்சிமன்றங்களிலும் திமுகவினருக்கு ஆட்சி, அதிகாரம் கிடைத்துவிட்டால் குறுநில மன்னர்களாகவும், கொடுங்கோல் தண்டல்காரர்களாகவும், மக்களுக்கு தரப் போகும் தண்டனைகளை அவர்களது கடந்தகால வரலாறு நம் கண் முன்னே நிறுத்துகிறது.

அதிமுகவினர் மேயர்களாகவும், நகர மற்றும் பேரூராட்சி மன்றத்தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருந்தபோது அன்பாகவும், பணிவாகவும், தொண்டு செய்யும் ஊழியர்களாகவும் பணியாற்றினர் என்பதை எண்ணிப் பாருங்கள். வன்முறையை வெறுக்கின்ற, சகோதரத்துவ சமத்துவத்தை விரும்புகின்ற எளிய மக்களின் இயக்கம்தான் அதிமுக.கட்டுப்பாடுகள் இல்லாமல் அராஜக ஆட்சி நடத்திவரும் திமுக ஆட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தக்க கடிவாளம் போடப்பட்டால் மட்டுமே, அவர்களை கட்டுப்படுத்தி தமிழகத்தை அமைதிபூங்காவாக காப்பாற்ற முடியும்.
வாக்குப்பதிவை அதிமுக முகவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். வாக்காளர்கள் காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அதை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் வரை மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை அளித்து, அதிமுக வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்து, புதிய வரலாற்று சாதனை படைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *