• Mon. May 6th, 2024

தன் வீட்டு மக்களுக்காக நிர்வாகம் செய்கிறார் ஸ்டாலின்… சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

கடந்த 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டு காலம் பின்னோக்கிச் சென்று விட்டது. நாட்டு மக்களுக்காக நிர்வாகம் செய்தவர் எடப்பாடியார், தன் வீட்டு மக்களுக்காக நிர்வாகம் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்டு 20ம் தேதி நடைபெறும் மாநாட்டிற்காக கழக அம்மா பேரவை சார்பில் மரக்கன்று வழங்கி, மாநாட்டு லோகோ ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டி அழைக்கும் நிகழ்ச்சி மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் அருகே நடைபெற்றது.
மரக்கன்றுகளை வழங்கியும், ஸ்டிக்கரை ஒட்டி மாநாட்டிற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்தார். பின்னர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது..,
தமிழர்கள் பண்பாடும், பாரம்பரியமிக்க மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி எடப்பாடியார்  தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்கும் வண்ணம் இல்லந்தோறும் இலை மலர மரக்கன்று வழங்கி அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இங்கு காய்கறி வாங்க மகிழ்ச்சியாக செல்லும் மக்கள் திரும்பி வரும்போது அதிர்ச்சியாக வருகிறார்கள் ஏனென்றால், கடுமையான விலைவாசி உயர்வு தான் காரணம். இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. இந்த அரசு விளம்பர வெளிச்சத்தில் உள்ளது முதலமைச்சர் உண்மையை பேசக்கூடாது என்று சத்தியபிரமாணம் எடுத்தது போல், பச்சை பொய் பேசி வருகிறார்.
தமிழர்கள் உரிமை,  ஜீவாதார உரிமை இவையெல்லாம் இன்றைக்கு பறிபோய் உள்ளது. நாங்கள் இளைஞர்களை பாதுகாக்கிறோம் என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை, மாணவர்கள் வாங்கிய கல்வி கடனை ரத்து செய்யவில்லை, மடிகணித்திட்டத்தை அடியோடு நிறுத்தி விட்டார்கள், நடைபெற்ற பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பரிட்சை எழுதவில்லை. விலைவாசி உயர்வு கட்டுக்குள் இல்லை, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது,  இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு புதிய பேருந்து கூட வாங்க முடியவில்லை, மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள் இதுதான் இளைய சமுதாயத்திற்கு திமுக கொடுக்கின்ற பரிசாகும்.
பூனை கண்ணை மூடிவிட்டால் உலகமே இருண்டது போல முதலமைச்சர் பேசி வருகிறார். உலகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கி செல்கிறது என்பதை போல், இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் மதுரை நோக்கி வருகின்றன. 
இன்றைக்கு செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை விசாரணையை செய்து வருகிறது. அதில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி பாட்டிலுக்கு 10 கோடி வீதம், ஒரு ஆண்டில் மட்டும் 3,600 கோடி கொள்ளை அடித்துள்ளனர். அதை கொடுத்தது மது அருந்துவோர், வாங்கியது கரூர் கம்பெனி, அது எங்கு சென்றது என்பது தான் இன்றைக்கு ஈடி விசாரணையாகும்.  ஒரே கையெழுத்தால் பல கோடி மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் கூறுகிறார், ஆனால் ஒரே கையெழுத்தால் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டன. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு  இப்படி ஒரே கையெழுத்தால் தமிழகத்தை அழவைத்துள்ளார்.
கொரோனா காலத்தில் கூட எடப்பாடியார் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால் இன்றைக்கு விலைவாசி எல்லாம் விண்ணை மூட்டுகிறது. எடப்பாடியார் நாட்டு மக்களுக்காக நிர்வாகம் செய்தார். ஆனால் ஸ்டாலின் தன் வீட்டு மக்களுக்காக நிர்வாகம் செய்கிறார் எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா.சரவணன், எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், பகுதி செயலாளர் அண்ணா நகர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *