
மதுரை மாவட்டம் சிந்தாமணி மேட்டுப்பூஞ்சையில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா கடந்த 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும். அந்த வகையில் வீதி உலா நிகழ்வை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்நிகழ்வில் வழி நெடுகிலும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் முக்கிய நிகழ்வான கிருதுமால் நதி சென்று பால்குடம் எடுத்து அலகு குத்தும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து உலக நன்மை வேண்டியும் மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பொழுதியை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர். திருவிளக்கு பூஜையை தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
