• Fri. Apr 19th, 2024

கடன் தவணை சலுகை திட்டங்கள் குறித்து சீனாவிடம் இலங்கை கோரிக்கை

இலங்கை வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யிடம் கடன் தவணை சலுகைத் திட்டங்கள் குறித்து இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பேச்சுவார்த்தை நடத்தினார்
இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்சவையும் சீன அமைச்சா் சந்தித்தார்.


கொரோனா பாதிப்பால் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனாவிடம் ஏராளமாக கடன் வாங்கியுள்ள இலங்கை, நிகழாண்டில் 200 கோடி டாலா் (சுமார் ரூ. 14,855 கோடி) வரை கடன் தொகையை திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில், இலங்கை-சீனா இடையிலான தூதரக உறவு தொடங்கியதன் 65-ஆவது ஆண்டையொட்டி, இரு நாள் பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி சனிக்கிழமை இலங்கை வந்தார்.


அவருக்கும், அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கும் இடையிலான சந்திப்பு அதிபா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பை தொடா்ந்து, அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கெனவே பொருளாதார பிரச்னையால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் தவணை சலுகைத் திட்டங்களை சீனா அறிவித்தால் இலங்கைக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சரிடம் அதிபா் கோத்தபய வேண்டுகோள் வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி சலுகை வா்த்தக கடன் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், நாட்டில் தொழிற்சாலைகளை சுமுகமாக நடத்துவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்தச் சந்திப்பின்போது அதிபா் கோத்தபய கூறியுள்ளார்.


இலங்கையில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆனால், இலங்கையை சீனா கடன் வலையில் சிக்கவைத்துள்ளதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *