இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனையை 13 மணி நேரம் கடலில் நீந்தி மாற்றுத்திறனாளி சிறுமி சாதனை படைத்தார்.
மும்பை கடற்படை அதிகாரி மதன் ராய். இவரது மகள் ஜியாராய் (14) ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்புக்குள்ளானவர். மும்பை கடற்படை பள்ளியில் படிக்கிறார். இவர், 2021 பிப்ரவரியில் மும்பை கடலில் 36 கி.மீ., நீந்தி சாதனை படைத்தார். அடுத்து தனது முயற்சியை இலங்கைக்கும் தமிழகத்துக்கும் திருப்பியுள்ளார் சாதனை சிறுமி ஜியாராய்.
இந்தியா – இலங்கை நட்புறவை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஜியா ராய், இலங்கை தலைமன்னாரில் இருந்து 28.5 கிலோ மீட்டர் தொலைவை 13 மணி நேரத்தில் கடலில் நீந்தியபடி தனுஷ்கோடியை அடுத்துள்ள அரிசல்முனை பகுதியை வந்தடைந்தார்.
இதுவரை இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை பலரும் நீச்சல் அடித்தவாறு வந்துள்ளனர். ஆனால், மாற்றுத்திறனாளி யாருமே நீந்தி வராத நிலையில், முதல் முதலாக காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியான ஜியா ராய் 13 மணி நேரத்தில் 28.5 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீந்தி வந்து சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நினைவு பரிசுடன் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி பாராடினார். மேலும் இந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஜியாராய், தற்போதைய இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தி எனவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.