வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் சிக்கித் தவிப்போரை மீட்பது குறித்து மாநகர போலீசாருக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி அளித்தனர்.
தற்போது பருவ மழைக்காலம் ஆதலால் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் குளிக்க மற்றும் ஏனைய தேவைகளுக்கு செல்வோர் மற்றும் சிறுவர்கள் என பலரும் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது.
அவ்வாறு சிறுவர்கள் மற்றும் நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் மூழ்கி சிக்கித் தவிக்கும்போது அவர்களை மீட்பதற்காக தீயணைப்புத்துறையினர் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தீயணைப்புத் துறையினரின் வருகை தாமதம் ஆகும் பட்சத்தில் நீர்நிலைகளில் சிக்கித் தவிப்போர் உயிர் இழக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.
இதனிடையே வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர் நிலைகளில் சிக்கித் தவிக்கும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை விரைந்து காப்பாற்றுவது குறித்தும், உயிர்காக்கும் சாதனங்களை கையாள்வது மற்றும் ரப்பர் படகுகளை இயக்குவது குறித்தும், மிதவை பொருட்களை பயன்படுத்தி நீரில் மூழ்கியவர்களை மீட்பது குறித்து கே.கே நகரை அடுத்துள்ள கே.சாத்தனூர் குளத்தில் மாநில பேரிடர் மீட்பு படை சார்பில் திருச்சி மாநகர போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 16 பெண் காவலர்கள் உள்ளிட்ட 54 போலீஸாருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் அந்தந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.